அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன், நாளை மறுநாள் பதவியேற்க உள்ள நிலையில், டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபடலாம் என, அமெரிக்க உளவு அமைப்பான, எப்.பி.ஐ (FBI ) எச்சரித்துள்ளது.
ஜோ பைடன் பதவியேற்பு விழாவின் போது, 50 மாகாணங்களிலும் வன்முறை சம்பவங்களை நிகழ்த்த டிரம்ப் ஆதரவாளர்கள் திட்டமிட்டிருப்பதாகவும், அமெரிக்க உளவுத் துறை எச்சரித்துள்ளது.
இதனால் தலைநகர் வொஷிங்டன் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள் முழுவதும் இராணுவ கட்டுப்பாட்டு பகுதியாக மாற்றப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற கட்டிடம், அலுவலக கட்டிடங்கள், உச்ச நீதிமன்றம் ஆகிய பகுதிகளில் 7 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தநிலையில், ‘பாதுகாப்புப் படைகளில் உள்ள, டிரம்பின் ஆதரவாளர்கள் சிலரால், ஜோ பைடன் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்’ எனவும் தகவல் பரவியுள்ளது. இதையடுத்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ள, 25 ஆயிரம், தேசிய காவல்படை எனப்படும் அதிரடிப் படையினர் குறித்த தகவல்களை ஆராயவும், எப்.பி.ஐ. (FBI) க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.