18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை சிறிலங்கா அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்த முடியாது என்று, முன்னாள் இராணுவத் தளபதியும், ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர்,
“ சிறிலங்காவில் 18 வயதுக்கும் 26 வயதுக்கும் இடைப்பட்டவர்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்குவதானால், குறித்த வயதெல்லைக்குள் 3.5 மில்லியன் தொடக்கம் 4 மில்லியன் வரையான இளைஞர்கள் இருப்பார்கள்.
ஒருவருக்கு ஆறு மாத இராணுவப் பயிற்சி அளிப்பதற்கு ஏழரை இலட்சம் ரூபா தேவைப்படும்.
அவ்வாறாயின் ஒரு இலட்சம் பேருக்கு, ஆறு மாத காலத்திற்கு இராணுவப் பயிற்சி அளிப்பதானால் கூட, குறைந்தது 75 பில்லியன் ரூபா தேவைப்படும்.
நிதி பற்றாக்குறை மற்றும் தளபாட சிக்கல்கள் இந்த திட்டத்தை செயற்படுத்துவதற்கு தடையாக இருக்கும்.
இராணுவப் பயிற்சிக்காக இந்தளவு நிதியை செலவிடும் நிலையில் தற்போதைய அரசாங்கம் இல்லை.” என்றும் சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.