கனடாவுடன் இருதரப்பு நல்லுறவுகளை மேம்படுத்தி இணைந்து பயணிப்பதற்கான விரும்பத்தினை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பிரதமர் ஜஸ்டின் ரூடோவிடத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.
கனடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோவிற்கும், அமெரிக்க ஜனாதிபதி பைடனுக்கும் இடையிலான தொலைபேசி உரையாடலொன்று நேற்று மாலையில் நடைபெற்றிருந்தது.
எனினும் குறித்த உரையாடல் தொடர்பாக பிரதமர் அலுவலகம் எவ்விதமான செய்திக்குறிப்புக்களையும் வெளியிட்டிருக்கவில்லை. கனடிய பிரதமர் மற்றும் அமெரிக்க ஜனாதிபதியின் வலையமைப்புக்களிலும் இந்தப் பேச்சுவார்த்தை பற்றிய வெளிப்படுத்தல்கள் காணப்பட்டிருக்கவில்லை.
இந்நிலையில், கனடிய பிரதமர் அலுவலகத்தின் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு அதிகாரி கனடிய தொலைக்காட்சிக்கு இந்த தொலைபேசி உரையாடல் சம்பந்தமான சில குறிப்புக்களை வெளியிட்டுள்ளார்.
அதன் பிரகாரம், தொலைபேசி கலந்துரையாடல் 30 நிமிடங்கள் வரையில் நீடித்திருந்ததாகவும் இதன்போது இரு நாடுகளும் இணைந்து பணியாற்றுவது தொடர்பில் தீவிரமான கரிசனை செலுத்தப்படடதாக கூறப்பட்டது.
நான்கு ஆண்டுகள் காணப்பட்ட கொந்தளிப்பான நிலைமைகள் முடிவுக்கு வந்துள்ளதாக பைடன், ரூடோவிடத்தில் கூறியுள்ளார். அத்துடன் பொருளாதார மீட்சி, காலநிலை மாற்றம் உள்ளிட்ட விடயங்களில் அயல்நாடான கனடாவுடன் கைகோர்க்கவுள்ளதாகவும் பைடன் குறிப்பிட்டுள்ளார்.
அதேசமயம், பாரிய குழாய் விரிவாக்கத்திட்டத்தினை இரத்துச் செய்தமை ஏமாற்றமளிப்பதாக பிரதமர் ரூடோ தெரிவித்துள்ளதோடு அதனால் ஏற்பட்ட இழப்புக்களையும் விபரித்துள்ளார்.
இழப்பீடுகள் நிச்சயம் ஏற்பட்டிருக்கும் என்பதை ஏற்றுக்கொள்வதாக கூறிய பைடன் கொள்கை ரீதியான முடிவினை மாற்றமுடியாது என்று நேரடியாகவே பதிலளித்துள்ளார்.