பயங்கரவாத குற்றச்சாட்டு தொடர்பான விடயங்களை கையாளும் போது, மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்று சிறிலங்காவுக்கான ஐ.நா வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர் வலியுறுத்தியுள்ளார்.
முதலில் பயங்கரவாதத்தின் வரையறை மற்றும் வழக்குகளின் பின்னணி உள்ளிட்ட, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கட்டமைப்பை மீளாய்வு செய்ய வேண்டும் எனவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாதத்தைத் தடுக்கும் நோக்கில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும், அந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டவர்களுக்கு நியாயமான விசாரணை மற்றும் உரிய செயன்முறையை வழங்க வேண்டும் என்றும் ஐ.நா வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார்.
மேலும் பயங்கரவாத குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினரின் மீதும் பாகுபாடு காட்டுவது மற்றும் களங்கம் விளைவிப்பது போன்ற விடயங்களையும் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பயங்கரவாத செயற்பாட்டில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட அல்லது தண்டிக்கப்பட்டவர்களுக்கு புனர்வாழ்வை வழங்குவதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.