தமிழர் தாயகத்தில் மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து இன்று அவசர கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இன்று காலை நடத்தப்பட்ட இந்த கலந்துரையடலில் தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
வடக்கு கிழக்கில் தமிழரின் பாரம்பரிய இடங்கள் தொல்பொருள் என்ற பெயரில் அபகரிக்கப்படுதல், காணி சுவீகரிப்புக்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாகவும், இவ்வாறான நெருக்கடிகளை எதிர்கொள்வது குறித்துமே இந்தக் கலந்துரையாடலில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
தமிழ் மக்களுக்கும், தமிழ்மக்களின் இருப்புக்கு எதிராக முன்னெடுக்கப்படும் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக, மக்கள் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகள், மதத் தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைந்து போராட்டங்களை முன்னெடுப்பது குறித்தும், இந்தச் சந்திப்பில் ஆராயப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தக் கலந்துரையாடலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.