வடக்கு கடற்பரப்பில் இந்திய மீன்பிடிப்படகு மூழ்கடிக்கப்பட்டு, நான்கு மீனவர்கள் பலியான சம்பவம் தொடர்பாக, இந்தியா வெளியிட்ட எதிர்ப்பு குறித்து சிறிலங்கா அரசாங்கம் எந்தப் பதிலையும் அளிக்காமல் மௌனம் காத்து வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் நான்கு மீனவர்கள் கொல்லப்பட்டதற்கு இந்தியா கடும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் சிறிலங்காவிடம் வெளிப்படுத்தியிருந்தது.
புதுடெல்லியில் உள்ள சிறிலங்காவின் பதில் தூதுவரிடமும், கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவர் மூலமும், சிறிலங்கா அரசாங்கத்திடம் இந்திய அரசினால் எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்டது.
எனினும், இந்தியாவின் இந்த கண்டனம், மற்றும் எதிர்ப்பு தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் மௌனம் காத்து வருகிறது.
இந்த விவகாரம், சட்டமா அதிபர் திணைக்களம், பாதுகாப்பு அமைச்சு, மற்றும் கடற்றொழில் அமைச்சின் கீழ் இருப்பதால், தம்மிடம் இருந்து அறிக்கை ஏதும் வெளியிடப்படவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.
எனினும், சட்டமா அதிபர் திணைக்களம் எந்த தகவலையும் வெளியிடவில்லை.
அதேவேளை, கடற்படையின் ஊடக அறிக்கைகளில் அதன் நிலைப்பாடு இருப்பதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளதாகவும் கொழும்பு ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.