இந்தியாவின் 72ஆவது குடியரசு தினம் இன்றாகும். அதனை முன்னிட்டு தேசிய நிகழ்வு டெல்லியில் நடைபெற்றது.
செங்கோட்டையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றியுள்ளார். இதன்போது எம்.ஐ 17 வி 5 ரக உலங்கு வானூர்தி தேசியக் கொடியுடன் வானில் பறந்தது.
இதனைத் தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை குடியரசுத் தலைவர் ராம்நாத் ஏற்றுக் கொண்டார்.
தொடர்ந்து இராணுவத்தின் உயரிய விருதுகளை வென்றவர்கள் அணிவகுப்பில் பங்கேற்றனர். 122பேர் அடங்கிய பங்களாதேஷ் முப்படை வீரர்களின் அணிவகுப்பும் நடைபெற்றது.
இந்நிகழ்வுகளில் பிரதமர் மோடியும் கலந்து கொண்டதுடன் அதற்கு முன்னதாக டெல்லியிலுள்ள போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.
தேசிய போர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்தும், மலர்களை தூவியும் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
பிரதமர் மோடியுடன், ராஜ்நாத் சிங் மற்றும் இராணுவ அதிகாரிகளும் போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
குடியரசு தின விழாவை முன்னிட்டு ஏனைய மாநிலங்களைப் போன்றே தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தேசியக்கொடி ஏற்றி ஆரம்பித்து வைத்ததுடன் இராணுவ, காவல்துறை அணிவகுப்பையும் ஏற்றுக்கொண்டார்.
தமிழக அரசு சார்பில் சென்னை மெரினா காமராஜர் சாலை காந்தி சிலை அருகே குடியரசு தின விழா நடைபெற்றது.