பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை மீளாய்வு செய்யும், முடிவில், உறுதியாக இருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது என்று ஐரோப்பிய ஒன்றிய – சிறிலங்கா கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய – இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் 23 ஆவது கூட்டம் நேற்று மெய்நிகர் முறையில் இடம்பெற்றுள்ளது.
இந்தக் கூட்டத்தின் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே, பயங்கரவாத தடைச்சட்டத்தை மீளாய்வு செய்வது தொடர்பான நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது.
பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் சர்வதேச மனித உரிமை தராதரங்கள் பின்பற்றப்படுவது முக்கியம் என்று இந்தக் கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
அதேவேளை, பயங்கரவாத எதிர்ப்பு கலந்துரையாடல் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பைத் தொடருவதற்கு எதிர்பார்த்துள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கம் சிறிலங்கா அரசாங்கம் இறக்குமதிக்கு விதித்துள்ள தடை தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் கடுமையான கவலையை வெளியிட்டுள்ளது.
அத்துடன், இதனால் ஐரோப்பிய ஒன்றிய வர்த்தகங்களில் பாதகமான தாக்கங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்துக்கு வழங்கிய இணை அனுசரணையில் இருந்து சிறிலங்கா அரசாங்கம் விலகிக் கொண்டமை குறித்தும் ஐரோப்பிய ஒன்றியம் கவலையை வெளியிட்டுள்ளது.