சிறிலங்கா படையினருக்கு புதிதாக மேலதிக பயிற்சி வசதிகளை அளிப்பது குறித்து, சீன பாதுகாப்பு அதிகாரிகள், சிறிலங்கா இராணுவத் தளபதியுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளது.
கொழும்பில் உள்ள சீன தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் வாங் டொங் மற்றும், துணைப் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் சாங் கியான்ஜின் ஆகியோர் நேற்று முன்தினம் சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் இந்தப் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளனர்.
சிறிலங்கா இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும், மற்றும் இராணுவ தளபதியின் செயலாளர் ஆகியோருடன் நடத்தப்பட்ட இந்தப் பேச்சுக்களில், இருதரப்பு இராணுவ உறவுகள் குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் ஏற்கனவே சிறிலங்காவின் முப்படைகளுக்கும் அளித்து வரும், இராணுவப் பயிற்சி வசதிகளுக்கு மேலதிகமாக புதிய பயிற்சி நெறிகளை வழங்குவது குறித்தும் இந்தச் சந்திப்பின் போது பேசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.