கொழும்பு துறைமுக கிழக்கு முனைய விவகாரத்தில், சிறிலங்கா அரசாங்கம் இந்தியாவுடன் ஒத்துழைத்து செயற்பட வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பான தமிழ் தேசிய முன்னணியின் நிலைப்பாடு குறித்து வவுனியாவில் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“சிறிலங்காவின் அயல்நாடாக இந்தியா இருக்கின்ற நிலையில், எமக்கும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு நலன்களில் மிகுந்த அக்கறை உள்ளது.
இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளுக்கு நாங்கள் ஒருபோதும் துணை போகமாட்டோம்.
சிறிலங்காவில் பல இடங்கள் சீனாவிற்கு கொடுக்கப்பட்டுள்ள சூழலில், இந்தியா தனது ஆதிக்கத்தை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த இடத்தில் சிறிலங்கா அரசாங்கம் இந்தியாவுடன் ஒத்துழைத்து செயற்படுவதே பொருத்தமானது” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.