சிறிலங்காவில் இன்று கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு தேசிய மருத்துவமனை உள்ளிட்ட ஆறு மருத்துவமனைகளிலும், கொழும்பு இராணுவ மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இராணுவ மருத்துவமனைகளிலும் இந்தியாவின் கொவிஷீல்ட் தடுப்பூசி போடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முதல் தடுப்பூசி லேடி ரிஜ்வே மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர் ஆனந்த விஜேவிக்ரமவுக்கு ஏற்றப்பட்டது.
அதேவேளை, சமநேரத்தில் சிறிலங்கா இராணுவத்தினருக்கும், தடுப்பூசிகள் போடப்பட்டன.
சுகாதாரப் பணியாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று கூறப்பட்ட போதும், தடுப்பூசி போடும் நடவடிக்கைகளில் பெருமளவில் சிறிலங்கா இராணுவத்தினருக்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணத்துக்கும் கொரோனா தடுப்பூசிகள் எடுத்து வரப்பட்டுள்ளதாகவும், நாளை தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்றும், யாழ். போதனா மருத்துவமனை பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.