சிறிலங்காவில் மோசமடைந்துவரும் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் கண்காணிப்பதற்கும் கடந்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கும் ஏற்றவகையிலான புதியதொரு தீர்மானத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்புநாடுகள் ஒன்றிணைந்து நிறைவேற்ற வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
சிறிலங்கா தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட்டின் அறிக்கை உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டதை அடுத்து மனித உரிமைகள் கண்காணிப்பகத்தால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச சட்டங்களுக்கு முரணான குற்றங்கள் மற்றும் மீறல்களினால் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கும் வகையில் மனித உரிமைகள் பேரவை செயற்பட வேண்டும்.
இதுவிடயத்தில் உரிய நடவடிக்கையை மேற்கொள்வதற்கென ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் சிறிலங்காவுக்குப் பல தடவைகள் வாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களையும் வலுவற்ற குழுக்களையும் பாதுகாப்பதற்கு சர்வதேசத்தின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக மாறியிருக்கிறது என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.