தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது உறவுகளை விடுதலை செய்யக் கோரி, கிளிநொச்சியில் இன்று தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி, கந்தசுவாமி கோவில் முன்பாக ஒன்று கூடிய உறவுகள், கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதுடன், தமது கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை, பந்தல் அமைக்கப்பட்டு, தொடர் போராட்டமாக முன்னெடுக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
வீதியை மறித்து நடத்தப்பட்ட போராட்டத்தினால், சிறிது நேரம் ஏ9 வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற கிளிநொச்சி தலைமை காவல்துறை அதிகாரி தலைமையிலான காவல்துறையினர் போராட்டக்காரர்களை வீதியில் இருந்து விலகிச் செல்லுமாறு எச்சரிக்கை விடுத்தனர்.
நீண்ட நேரம் பேச்சுக்களின் பின்னர், வீதியின் ஒரு பகுதியின் ஊடாக போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டத்தில் பெண்களும், குழந்தைகளும் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.