சாந்தன், முருகன், பேரரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை தொடர்பான பரிந்துரையை ஆளுநருக்குத் தமிழக அமைச்சரவை அனுப்பி வைத்து கிட்டத்தட்ட 30 மாதங்கள் நிறைவடையப் போகின்றன என்று ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இத்தனை காலத்திற்கு பின்னரும் இல்லாத காரணங்களைக் கூறி இவர்களின் விடுதலைக்கு ஆளுநர் முட்டுக்கட்டை போடுவது எந்த வகையிலும் நியாயமல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பேரறிவாளன் விடுதலை குறித்து ஒரு வாரத்தில் தமிழக ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்டு 12 நாட்களாகியும் அதுகுறித்து இன்றுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
30ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும் பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநர் மேலும் ஒரு முறை உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காதது மிகவும் வேதனையளிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.