இந்தியா மற்றும் ஜப்பானுடன் செய்து கொள்ளப்பட்ட கிழக்கு கொள்கலன் முனைய உடன்பாட்டை முறித்துக் கொள்ளும் சிறிலங்கா அரசாங்கத்தின் முடிவுக்கு ஜப்பான் வருத்தம் வெளியிட்டுள்ளது.
வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவை நேற்று அவசரமாகச் சந்தித்த ஜப்பானிய தூதுவர் அகிரா சுகியாமா, தமது அரசாங்கத்தின் அதிருப்தியையும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது, ஜப்பானுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் நீடித்து வரும், இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
முன்னதாக, கிழக்கு முனைய உடன்பாட்டை முறித்துக் கொள்ளும் அறிவிப்பு வெளியானதை அடுத்து, இந்திய தூதுவர் கோபால் பாக்லே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஆகியோரைச் சந்தித்து இந்தியாவின் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.