5 திகதி முன்னெடுக்கப்படவுள்ள ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் கட்சி, தொழிற்சங்கம், வர்க்க, இன, மத, பேதமின்றி ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளனர்.
அத்துடன், கல்வி, போக்குவரத்து போன்ற துறைகளின் பல தொழிற்சங்கங்கள் இதற்கு ஆதரவு தெரிவிக்கின்ற நிலையில் நாளைய தினம் மலையகம் முடங்கும் என ஹட்டனில் இன்று நடைபெற்ற தொழிற்சங்கக் கூட்டமைப்பின் ஊடக சந்திப்பில் தொழிற்சங்கப் பொதுச் செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சிறிலங்கா கல்விச் சமூக சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் சங்கர மணிவண்ணன் கருத்து தெரிவிக்கையில், “நாங்கள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக ஒன்று கூடினோம். அதில், சகல ஆசிரியத் தொழிற்சங்கங்களும் ஆதரவு வழங்குவதாகத் தெரிவித்தனர்.
சிங்கள ஆசிரிய தொழிற்சங்கங்களும் இதற்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளதன் காரணமாக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை சமூகப் பிரச்சினையாக மாறியுள்ளது.
கம்பனிகள் தொடர்ச்சியாக எம்மை ஏமாற்றி வந்துள்ளனர். ஆகவே, நாங்கள் இதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. நாட்டில் ஏனைய பிரதேசங்களில் ஒரு பிரச்சினை வரும்போது ஹர்த்தலாக நடத்தி அந்தப் பிரச்சினையினை வெற்றி கொள்கின்றனர். ஆனால், மலையகத்தில் அவ்வாறான ஒரு நிலை காணப்படுவதில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.





