தமிழ் பேசும் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள், மற்றும் ஆக்கிரமிப்புகளைக் கண்டித்து நடத்தப்படும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான தமிழர் பேரணி மன்னாரைச் சென்றடைந்துள்ளது.
மூன்றாவது நாள் பேரணி வவுனியாவில் நிறைவடைந்த நிலையில், இன்று காலை, 7.45 மணியளவில், நான்காவது நாள் பேரணி ஆரம்பமாகியது.
வவுனியா புதிய பேருந்து நிலையத்தின் முன்பாக தொடங்கிய நடைபவனி காலை 9.00 மணிக்கு பண்டார வன்னியின் சிலை அருகே ஒன்று கூடி, வாகன பேரணியாக புறப்பட்டது.
பட்டாணிச்சூர் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் முன்பாக நடைபவனியாகச் சென்று பின்னர், நெளுக்குளம், பூவரசக்குளம் ஆகிய பகுதிகளை கடந்து பறயனாலங்குளம் வீதியைச் சென்றடைந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
அங்கிருந்து நண்பகல் 12 மணியளவில் மடு வீதியை சென்றடைந்த பேரணி, மடு சந்தியிலிருந்து முருங்கன் ஊடாக மன்னரை சென்றடைந்தது.
இந்தப் பேரணியில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரதிநிதிகள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், சர்வமதத் தலைவர்களுடன், பெருமளவு முஸ்லிம்களும் இணைந்துள்ளனர்.
இன்று இந்தப் பேரணி மிகவும் பிரமாண்டமானதாக மாற்றமடைந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இன்று மாலை பேரணி கிளிநொச்சியை வந்தடையும் என்றும், நாளை காலை அங்கிருந்து பொலிகண்டி நோக்கிப் புறப்படும் என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.





