ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடரில் சிறிலங்கா மீது புதிய தீர்மானம் ஒன்றை முன்வைக்கவுள்ளதாக, அனுசரணை நாடுகளின் குழு உறுதிப்படுத்தியுள்ளது.
ஜெனிவாவுக்கான பிரித்தானியாவின், நிரந்தரப் பிரதிநிதி, ஜூலியன் பிரைத்வெயிட் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு இதனை நேற்று அறிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் எதிர்வரும் 22ஆம் நாள் ஆரம்பமாகி அடுத்த மாதம், 23 ஆம் நாள் வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தொடரில், சிறிலங்காவில் நல்லிணக்க்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகளை ஊக்குவிக்கும் புதிய பிரேரணையை, அனுசரணை நாடுகளான பிரித்தானியா, கனடா, ஜேர்மனி, மசிடோனியா, மொன்ரெனிக்ரோ ஆகியன இணைந்து முன்வைக்கும் என்றும், ஜூலியன் பிரைத்வெயிட் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அண்மையில் வெளியிட்ட அறிக்கையை அடிப்படையாக கொண்டே புதிய தீர்மானம் முன்வைக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.