பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான, மாபெரும் பேரணியில் கலந்து கொண்ட அரசியல் பிரமுகர்களுக்கு எதிராக பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ், பருத்தித்துறை, நெல்லியடி மற்றும் வல்வெட்டித்துறை காவல் நிலைய பொறுப்பதிகாரிகளால் இது தொடர்பான, பி அறிக்கைகள் பருத்தித்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
ஏற்கனவே பேரணிக்கு தடைகோரி ஏ ஆர் அறிக்கையூடாக பருத்தித்துறை, நெல்லியடி மற்றும் வல்வெட்டித்துறை காவல் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளால், தொடரப்பட்ட வழக்கிற்கு நீதிமன்றம் கட்டளை வழங்கியிருந்தது.
இந்த தடை உத்தரவு மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்தே, பேரணியில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகளுக்கு எதிராக காவல்துறையினரால் “பி” அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், சாணக்கியன் மற்றும் யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் மணிவண்ணன், சட்டத்தரணி சுகாஷ், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்டவர்களுக்கு எதிராகவே இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.