சிறிலங்கா அரசுக்கு எதிரான அனைத்துலக குற்றவியல் பொறிமுறையை எடுத்திருக்கும் கனடிய அரசிற்கு கனடிய தமிழர் தேசிய அவை நன்றிகளைத் தெரிவித்துள்ளது.
உலகப்பரப்பெங்கும் ஈழத்தமிழர்கள் மத்தியில் பேசுபொருளாக இருக்கும் சிறிலங்கா அரசு புரிந்த இன அழிப்பு தொடர்பான விடயங்களை ஐ.நா மனித உரிமைப் பேரவையில் கொண்டு சென்று அங்கு மேற்கொள்ள இருக்கும் புதிய தீர்மானம் தொடர்பாக புலம்பெயர் அமைப்புக்கள் அந்தந்த நாடுகளின் அரசுகளோடு தொடர்புகளை மேற்கொண்டிருந்தனர்.
அந்த வகையில் கனடியத் தமிழர் தேசிய அவை ஐ.நா மனித உரிமை சபை உறுப்பு நாடுகளுடனும், ஐரோப்பிய ஒன்றியத்துடனும், கனடாவின் வெளிவிவகார அமைச்சுடனும் மற்றும் கனடிய பிரதான எதிர்க்கட்சிகளுடனும் பல்வேறு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர்.
அனைத்துலக மட்ட பேச்சு வார்த்தைகளில், 14 நாட்டு புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் கூட்டமைப்பான அனைத்துலக ஈழத் தமிழர் மக்கள் அவையுடன் இணைந்து கலந்து கொண்டனர்.
இதன்போது, சிறிலங்காவில் உள்ளகப் பொறிமுறை தவிர்க்கப்பட்டு பன்னாட்டு விசாரணை மற்றும் குற்றவியல் பொறிமுறை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் இப்பொறிமுறைகளில் தமிழர்களுக்கெதிராக இடம் பெற்ற இனவழிப்பு உள்ளடக்கப்பட வேண்டும் என்றும் கோர ப்பட்டிருந்தது
அத்துடன் ஐநா சபையில் கொண்டுவரப்பட்ட முன்னைய தீர்மானங்களில் தமிழர் தரப்பு என்ற சொற்பதங்கள் பயன்படுத்தப்படவில்லை ஆனால் இம்முறை வருகின்ற தீர்மானத்தில் பாதிக்கப்பட்ட தமிழர் தரப்பை வெளிப்படையாக குறிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் சர்வதேச நீதி மன்றம் மற்றும் இவை போன்ற மாற்று அனைத்துலக நீதிமன்ற பொறி முறைகளில் ஸ்ரீலங்கா அரசும், குற்றமிழைத்தவர்களும் நிறுத்தப்படவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதன் பலனாக கனடிய தமிழர் தேசிய அவைக்கு அரச தரப்பினர் கோரிக்கையின் அநேக விடயங்களை ஏற்றுக்கொண்டு மற்றைய உறுப்பு நாடுகளுக்கும் கொண்டு செல்வதாக தெரிவித்திருக்கிறார்கள்.
தொடர்ச்சியான சந்திப்புக்கள் பலதரப்புடன் மேற்கொண்ட அடிப்படையில் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கக்கூடிய நிலையில் கனடா இருந்தாலும், உலக அரசியலின் மாற்றம் என்பது ஏனைய நாடுகளின் மாற்றத்தை பொறுத்தே அமையும். முடிந்த அளவு ஏனைய நாடுகளும் கனடாவின் நிலைப்பாட்டுக்கு வருவதற்கு தொடர்ந்தும் முயற்சிப்போம் என்றும் கனடிய தமிழர் தேசிய அவை குறிப்பிட்டுள்ளது.





