ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா மீது மேற்குலக நாடுகள் கொடுத்து வரும் அழுத்தங்கள் மற்றும் நெருக்கடிகளுக்கு சீனா எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
பெய்ஜிங்கில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வாங் வென்பின், (WANG WENPIN) இதனைத் தெரிவித்துள்ளார்.
“மனித உரிமைகள் விவகாரத்தில் இரட்டைத் தன்மை பேணப்படுவதையும், இதனை அரசியல் மயமாக்குவதையும், மனித உரிமைகள் பிரச்சினைகள் என்ற பெயரில், ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையீடு செய்வதையும், சீனா தொடர்ந்தும் எதிர்க்கிறது.
ஏனைய நாடுகளின் இறையாண்மை, அரசியல் சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாக்கும் முயற்சிகளை மதிக்க வேண்டும்.
மற்றவர்களின் உள்விவகாரங்களில் தலையிடும் நடவடிக்கைகளை தவிர்த்து, அரசியல் அழுத்தங்களைச் செலுத்த வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.