கனிம மணல் அகழ்வை மேற்கொள்வதற்கு அனுமதி அளிப்பது தொடர்பாக, சீன நிறுவனம் ஒன்றுடன் சிறிலங்கா அரசாங்கம் பேச்சுக்களை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
310 மில்லியன் டொலர் பெறுமதியான இந்த கனிம மணல் திட்ட உடன்பாடு குறித்து, சீனாவின் மெட்டலுர்ஜிகல் (Metallurgical) சர்வதேச குழும நிறுவனத்துடன், பீஜிங்கில் உள்ள சிறிலங்கா தூதரகம் பேச்சுக்களை நடத்தியுள்ளது.
இந்த திட்டம் தொடர்பாக, குறித்த சீன நிறுவத்தின் முகாமைத்துவ பணிப்பாளர், வாங் சூ (Wang Zhou)வுக்கும், சீனாவுக்கான சிறிலங்கா தூதுவர் பாலித கொஹன்னவுக்கும் இடையில் நேற்று முன்தினம் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.
இந்த கனிம மணல் திட்டம், 310 மில்லியன் டொலர் பெறுமதியானதாக இருக்க கூடும் என்று தெரிவித்துள்ள சீனாவில் உள்ள சிறிலங்கா தூதரகம், மேலதிக விபரங்கள் எதையும் வெளியிடவில்லை.
அதேவேளை, திருகோணமலை – புல்மோட்டைப் பகுதியில் கனிம வள அகழ்வு சிறிலங்கா அரசாங்க நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தையே சீன நிறுவனத்துக்கு வழங்க சிறிலங்காஅரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.