கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை இந்திய நிறுவனத்துடன் இணைந்து அபிவிருத்தி செய்வதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
மேற்கு கொள்கலன் முனையத்தை கட்டியமைத்து, செயற்படுத்தி, 35 ஆண்டுகளில் ஒப்படைக்கும் வகையிலான இந்த திட்டத்துக்கு, சிறிலங்கா அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
அரச மற்றும் தனியார் துறை கூட்டு முயற்சியாக, சிறிலங்கா துறைமுக அதிகாரசபையுடன் இணைந்து, இந்தியாவின் அதானி குழுமம் இதனைச் செயற்படுத்தவுள்ளது.
இந்த திட்டத்தை செயற்படுத்துவதற்கு நிறுவனங்களை பரிந்துரைக்குமாறு, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளிடம் கோரப்பட்ட போதும், இந்தியா மாத்திரம் அதானி குழுமத்தை முன்மொழிந்துள்ளது.
இதையடுத்து திட்டங்களை மதிப்பீடு செய்வதற்கான, பேச்சுவார்த்தை மற்றும் திட்ட குழுவொன்றை சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
ஏற்கனவே கிழக்கு கொள்கலன் முனையத்தை இந்திய நிறுவனத்தின் உதவியுடன் அபிவிருத்தி செய்ய சிறிலங்கா அரசாங்கம் இணங்கியிருந்த போதும், அண்மையில் அந்த ஒப்பந்தத்தை மீறி, முழுவதையும், துறைமுக அதிகாரசபையே செயற்படுத்துவதற்கு முடிவுசெய்திருந்தது.
இதனால் இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான உறவுகளில் நெருக்கடிகள் ஏற்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.





