மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி மாபியாக்களினால் முன்னெடுக்கப்படும் காணி அபகரிப்புக்களை கண்டித்து ஏறாவூர் புன்னக்குடா பிரதேசத்தில் மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை, கிரான், ஏறாவூர்பற்று-செங்கலடி, ஆகிய பிரிவுகளில் உள்ள அரசகாணிகளுடன் இணைந்து பொது மக்களின் மற்றும் வெளிநாடுகளில் உள்ள காணிகளை ஒரு குழுவினர் விற்பனை செய்துருவருவதாகவும் அதற்கு அதிகாரிகள் துணை போவதையும் இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் கண்டித்திருந்தனர்.
இப்பகுதியில் உள்ள காணிகளை அரச அதிகாரிகளுக்கு பணத்தினைக்கொடுத்து ஒரு குழுவினர் நீண்டகாலமாக இவ்வாறான காணி அபகரிப்பினை முன்னெடுத்துவருவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் குற்றம் சாட்டினார்கள்
இப்பகுதியில் தமிழ் மக்களின் காணிகள் நீண்டகாலமாக அபகரிக்கப்பட்டு இவ்வாறு விற்பனை செய்யப்பட்டுவருவதாகவும் இது தொடர்பில் ஜனாதிபதி முறையான விசாரணைகளை மேற்கொண்டு நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர்.





