சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள், மெடிட்ரேறனியன் கடலில் (Mediterranean) விபத்துக்குள்ளானத்தில், 39 பேர் உயிரிழந்துள்ளனர்.
தெற்கு துனிசியா பகுதியில் இந்த விபத்து நேரிட்டதாகவும், கடலோர காவல்படையினரால் 165 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந்த விபத்தில் தப்பிப் பிழைத்தவர்களைக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல்கள் இன்னும் நடந்து கொண்டிருப்பதாக, துனிசிய பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கூறியுள்ளார்.
மீட்கப்பட்டவர்கள் அனைவரும் ஐவரிகோஸ்ட் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று புலம்பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆபிரிக்காவிலும் மத்திய கிழக்கிலும் நடைபெறும் மோதல்கள் மற்றும் வறுமையில் இருந்து தப்பி ஐரோப்பாவில் புகலிடம் தேடுவோருக்கான கேந்திர மையமாக துனிசிய கடலோரப் பகுதி மாறியிருப்பதாகவும், செய்திகள் கூறுகின்றன.