ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் பிளவுபட்டுள்ளதால், சிறிலங்காவின் நிலைமை மோசமான நிலையில் இருப்பதாக இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டும் தகவல்கள் கூறுகின்றன.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான தீர்மான வரைவு, நேற்று முன்தினம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், 47 உறுப்பு நாடுகள் மூன்றாக பிளவுபட்டுள்ளன.
முன்னர் சிறிலங்காவுக்கு ஆதரவளிக்க இணங்கிய நாடுகள் கூட தற்போது மேற்குலக நாடுகளின் அழுத்தங்களை அடுத்து, தமது முடிவை மாற்றிக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 20 நாடுகள் வாக்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், 10 நாடுகள் மட்டுமே சிறிலங்காவுக்கு ஆதரவாக வாக்களிக்கும் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எஞ்சியுள்ள 17 நாடுகள் வாக்களிப்பின் போது நடுநிலை வகிக்கும் என்றும், இது சிறிலங்காவுக்கு பெரும் அடியாக இருக்கும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
இந்தியா, பங்களாதேஷ், நேபாளம் ஆகிய நாடுகள், நடுநிலை வகிக்க முடிவு செய்திருப்பதாகவும் இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.





