வடக்கு மாகாண காணி ஆவணங்கள் அனுராதபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டமை தனது அதிகாரத்துக்கு அப்பாற்பட்ட விடயம் என்று யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மகேசன் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் இருந்த வடக்கு மாகாண காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் ஆவணங்கள், கடந்தவாரம் இரவோடு இரவாக, அனுராதபுரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டிருந்தன.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மகேசன்,
“ வட மாகாண காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் அலுவலகம் யாழ்.மாவட்ட செயலகத்தில் இருந்த போதும், அது செயலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கவில்லை.
அதன் நிர்வாக நடவடிக்கைகள் அனைத்தும் அதற்கான பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளின் மேற்பார்வையிலேயே இடம்பெற்று வந்தன.
ஆவணங்களை அனுராதபுரத்துக்கு கொண்டு செல்வது தொடர்பான முடிவை அவர்களே எடுத்திருந்தார்கள்.
எனினும், யாழ்.மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் ஆவணங்கள் அனுராதபுரத்திற்கு எடுத்துச் செல்லப்படவில்லை.” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





