ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்துக்கு இந்தியாவின் ஆதரவை பெறுவதற்கான புதிய முயற்சிகளை பிரித்தானியா மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிரித்தானியாவின் வெளிவிவகார, கொமன்வெல்த் மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் தாரிக் அகமட், தற்போது இந்தியாவில் தங்கியுள்ளார் என்றும் அவர் இந்திய அரசாங்கத்துடன் இது குறித்துப் பேச்சு நடத்துவார் என்று நம்பப்படுவதாகவும், இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தாரிக் அகமட் தலைமையிலான பிரித்தானியாவின் உயர்மட்டக் குழு, இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் வெளிவிவகாரச் செயலாளர் ஹர்ஷ் வி சிரிங்லாவைச் சந்தித்துப் பேசவுள்ளது.
இருதரப்பும் பிராந்திய விவகாரங்கள் மற்றும் இருதரப்பு உறவுகள் உள்ளிட்ட பரந்துபட்ட விடயங்கள் குறித்து பேசவுள்ளது. இதன்போது சிறிலங்கா விவகாரம் குறித்தும் கலந்துரையாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இராஜதந்திர வட்டாரம் ஒன்று தெரிவித்துள்ளது