ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அனுசரணை நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானம் மீது வாக்கெடுப்பைக் கோருவது குறித்து ஆராய்ந்து வருவதாக, சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே, இது நியாயமற்ற- பக்கச்சார்பாக தீர்மானம் என்றும் இதனை சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என்றும் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை ஏற்கனவே இரண்டு முறை நிராகரித்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், அந்த அறிக்கையை அடிப்படையாக கொண்ட இந்த தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், இந்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பைக் கோருவது குறித்து நட்பு நாடுகளுடன் அரசாங்கம் ஆலோசனை நடத்தி வருகிறது என்றும், அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்கால விசாரணைகளுக்காக. மனித உரிமை மீறல்கள் மற்றும் தொடர்புடைய குற்றங்கள் குறித்த சாட்சியங்கள், ஆதாரங்களைச் சேகரித்து, ஒருங்கிணைத்து, பகுப்பாய்வு செய்து பாதுகாக்கும் மத்திய தகவல் களஞ்சியத்தை உருவாக்கும் விடயத்துக்கு ஒத்துழைப்பை வழங்கப் போவதில்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.





