தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் படத்தைப் பிரசுரித்த யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் உதயன் நாளிதழுக்கு எதிராக சிறிலங்கா காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 26ஆம் நாள், தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் படத்துடன் பிறந்தநாள் தொடர்பான செய்தியை, உதயன் நாளிதழ் வெளியிட்டிருந்தது.
இதற்கு எதிராக, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் சிறிலங்கா காவல்துறையினரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சட்டத்தரணிகள் கே.வி.தவராசா மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் உதயன் நாளிதழ் சார்பில் முன்னிலையாகி, வாதிட்டனர்.
இந்த வாதங்களை அடுத்து, வழக்கிலிருந்து உதயன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சரவணபவன் மற்றும் செய்தி ஆசிரியரான டிலீப் அமுதன் ஆகியோரை குற்றச்சாட்டில் இருந்து விடுவித்து நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.





