தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவளிக்கும் வகையில் கருத்து தெரிவித்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பில், மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தக்கட்ட சட்ட நடவடிக்கை குறித்து சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வு திணைக்களம் இந்த ஆலோசனையைக் கோரியுள்ளது. குறித்த வழக்கு, கொழும்பு பிரதான நீதிவான் புத்திக்க ஸ்ரீ ராகல முன்னிலையில், இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது குறித்த விடயத்தை குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் அறிவித்துள்ளது. எனினும், சட்டமா அதிபரின் ஆலோசனை இதுவரையில் தமக்கு கிடைக்கப்பெறவில்லை என்றும் குற்றப் புலனாய்வு திணைக்களம் மன்றுரைத்துள்ளது.
இந்த நிலையில், விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை, எதிர்வரும் 10 ஆம் திகதி, வழக்கு மீள விசாரணைக்கு அழைக்கப்படும்போது சமர்ப்பிக்குமாறு, நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு வடக்கிலும், கிழக்கிலும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கை மேலோங்க வேண்டும் என்று கடந்த 2018 ஆம் ஆண்டு ஜுலை மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஜனாதிபதியின் மக்கள் சேவை நிகழ்ச்சித் திட்டத்தில் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்திருந்தார்.





