சிறிலங்காவுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்து நிரந்தர பழிச்சொல்லுக்கு ஆளாக வேண்டாம் என இந்தியப் பிரதமர் மோடிக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
” சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் குறித்து, ஐ.நா. மனித உரிமை மன்றத்தில், கொண்டு வரப்படும் தீர்மானத்தின் போது, சிறிலங்காவுக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் என சிறிலங்கா வெளியுறவுச் செயலாளர் ஜெயநாத் கொலம்பகே அளித்துள்ள பேட்டியும் – அதுகுறித்து எந்தக் கருத்தும் சொல்லாமல் அமைதி காக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் மவுனமும், உலகத் தமிழர்கள் இடையேயும், தமிழகத்திலும், பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சிறிலங்கா வெளியுறவுத் துறைச் செயலாளரை, இந்தியாவின் நிலைப்பாடு குறித்து முடிவு எடுக்க மத்திய பாஜக அரசு அனுமதித்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.
இந்தப் பிரச்சினையில் மத்திய பாஜக அரசு ஏனோ தானோ என்று அக்கறை காட்டாமல் இருப்பது, தமிழர்களை அலட்சியப்படுத்தும் அணுகுமுறையின் பாற்பட்டதாகும்.
இந்தியாவின் தொப்புள்கொடி உறவுகளாம் ஈழத் தமிழர்களை வஞ்சிப்பதை – உலகெங்கும் வாழும் 9 கோடி தமிழர்கள் எந்நாளும் மன்னிக்க மாட்டார்கள்.
தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் கருத்தினைக் கூட பிரதமர் நரேந்திர மோடி கேட்காமல் – போர்க்குற்றத்தில் ஈடுபட்ட சிறிலங்காவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கத் திட்டமிடுவது, தமிழ் இனத்திற்கு முற்றிலும் எதிரானது.
ஐ.நா. மன்றத்தில் கொண்டு வரப்படும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பது மட்டுமின்றி, சிறிலங்காவின் போர்க்குற்ற விசாரணை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குச் சென்றிடும் வகையில் – உறுப்பு நாடுகளின் ஆதரவினை திரட்டி – உரிய திருத்தங்களுடன் அந்தத் தீர்மானம் நிறைவேற்றிட பிரதமர் நரேந்திர மோடி நேரடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுத்திட வேண்டும்.” என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.