இனக்கொலை புரிந்த சிறிலங்கா அரசுக்கு துணைபோகும் இந்திய மத்திய அரசை தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் ஒரு தீர்மானம் வரப்போகிறது.
இத்தீர்மானம் முழுமையானதாகவோ, சிறிலங்கா அரசை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிப்பதற்கான வகையிலோ இல்லை.
எனினும், சிறிலங்காவின் போர்க்குற்றங்களுக்கு, மனித உரிமை மீறலுக்கு எதிரான ஒரு முன்னெடுப்பு ஆகும்.
இந்த அரைகுறைத் தீர்மானத்தைக்கூட இந்தியா ஆதரிக்கப் போவதில்லை என்ற செய்திகள் தமிழர்கள் நெஞ்சில் நெருப்பை அள்ளிக் கொட்டுகின்றன.
ஈழத் தமிழ் மக்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்த சிங்கள பேரினவாத இனக்கொலை அரசின் மீது கொண்டு வரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்.
ஆனால், சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காது; சிறிலங்கா அரசைத்தான் ஆதரிக்கப் போகிறது என்று சிறிலங்கா வெளியுறவு செயலாளர் ஜெயநாத் கெலம்பகே, கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள எட்டுக்கோடி தமிழர்களின் இதயக் குமுறலை அலட்சியப்படுத்தி விட்டு, தமிழினத்திற்குத் துரோகம் இழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் செயல் வன்மையான கண்டனத்துக்கு உரியது.
இதை தமிழர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.” என்றும் வைகோ குறிப்பிட்டுள்ளார்.