தமிழ் இனத்துக்கு எதிரான நில ஆக்கிரமிப்பு, சத்தம் இன்றி ஒரு பெரும் யுத்தமாக மாறியிருக்கிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு- கிழக்கில் தமிழ் மக்களின் பாரம்பரிய நிலம், வாழ்க்கை மற்றும் அடையாளம் ஆகியவற்றை நிர்மூலம் செய்து வரும் நில ஆக்கிரமிப்பில் இருந்து எம்மை பாதுகாப்பதற்கும், அதனை தடுப்பதற்குமான வழிவகைகளை ஆராயும் பொருட்டும் ஏற்பாடு செய்யப்பட்ட இணையவழி மாநாட்டில் தலைமையுரை நிகழ்த்திய போதே அவர் இவ்வாற குறிப்பிட்டுள்ளார்.
“நிலம் மட்டுமன்றி நிலத்துடன் சேர்த்து எமது வாழ்வும், அடையாளமும் வரலாறும் சேர்த்தே அழிக்கப்படுகிறது.
இது ஒரு பெரும் மிகப்பெரும் மனித உரிமை மீறல் ஆகும்.
அரசாங்கங்கள் மேற்கொண்ட இந்த இந்த மனித உரிமை மீறல்களே தமிழ் மக்கள் தமது நிலத்தையும் வாழ்வையும் அடையாளத்தையும் பாதுகாப்பதற்காக ஆயுத போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு காரணமாக அமைந்தது.
ஆயுத போராட்டம் 2009ஆம் ஆண்டு ஒரு பெரும் இனஅழிப்புடன் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போதிலும் எமக்கு எதிரான நில ஆக்கிரமிப்பு யுத்தம் இன்னமும் நிற்காமல், மேலும் தீவிரம் அடைந்துள்ளது.
சிறிலங்கா சுதந்திரம் கிடைத்தது முதல் மிகவும் நுட்பமான முறையில் ஒரு இனநாயக நாடாக கட்டமைக்கப்பட்டு வருகின்றது.
இத்தகைய இனநாயக கட்டமைப்பே இந்த நாட்டில் ஸ்திரமற்ற தன்மை, இன முரண்பாடுகள், ஆயுத மோதல் மற்றும் மனித உரிமைகள் மீறல்களுக்கு காரணமாக இருந்து வருகின்றது.
ஆகவே இந்த உண்மையை புரிந்து கொள்ளாமல் மேற்கொள்ளப்படும் எந்த ஒரு சமாதான முயற்சிகளோ, பொறுப்புக்கூறல் முயற்சிகளோ அல்லது நீதிக்கான முயற்சிகளோ வெற்றி அளிக்கப் போவதில்லை.
இதனை சர்வதேச சமூகம் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். மனித உரிமைகள் பாதுகாக்கப்படாமல் சமாதானத்தை அடைய முடியாது,” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.