சிறிலங்காவும் சீனாவும் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
சிறிலங்கா மத்திய வங்கிக்கும் பீப்பிள்ஸ் பாங்க் ஒப் சீனாவுக்கும் (PEOPLES BANK OF CHINA) இடையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதாக சிறிலங்கா மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இரண்டு நாடுகளின் மத்திய வங்கிகளின் ஆளுநர்கள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்கள்.
இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சி, இருதரப்பு வர்த்தகம் மற்றும் நேரடி முதலீட்டை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த உடன்பாடு எட்டப்பட்டதாகவும், இரு நாடுகளும் ஒப்புக் கொண்ட பின்னர் மேற்படி திட்டங்களுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று சிறிலங்கா மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
சிறிலங்காவின் மிகப்பெரிய இறக்குமதி நாடாக சீனா உள்ளது. 2020 ஆம் ஆண்டில் சீனாவிலிருந்து சிறிலங்காவுக்கு 3.6 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இறக்குமதி நடைபெற்றுள்ளது.இது சிறிலங்காவின் இறக்குமதியில் 22.3 சதவீதமாகும்.