ஜெனிவா கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள பிரேரணை மீதான இந்தியாவின் நிலைப்பாடு இன்று ஜெனிவாவில் உள்ள இந்திய தூதரகம் மூலமாக அறிவிக்கப்படும் என்று இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள பிரேரணையை தோற்கடிக்க ஆதரவு தருமாறு, சிறிலங்கா அரசாங்கம் பல்வேறு வழிகளில் இந்தியாவிடம் கோரிக்கைகளை விடுத்திருந்தது.
சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியும், ஆதரவு தருமாறு கேட்டிருந்தார்.
எனினும், இந்தியா ஜெனிவா தீர்மானம் தொடர்பான எந்த முடிவையும் அறிவிக்காமல் அமைதியாக இருந்து வந்தது.
இந்தநிலையிலேயே ஜெனிவாவில் உள்ள தனது நிரந்தர விதிவிடப் பிரதிநிதி மூலம் இன்று இந்தியா தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, ரைம்ஸ் ஒவ் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
நடுநிலை வகிப்பது இந்தியாவுக்கு ஒரு தெரிவாக இருந்தாலும், இந்த பிரேரணையை எதிர்த்து சீனா, பாகிஸ்தான், ரஷ்யா போன்ற நாடுகள் வாக்களிக்கவுள்ள நிலையில், அது இலகுவான முடிவாக இருக்காது என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.