ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் வழங்கப்பட்டுள்ள ஆணைக்கு அமைய, சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான சாட்சியங்கள், தகவல்களைத் திரட்டி, ஆவணப்படுத்தி, பகுப்பாய்வு செய்து, பாதுகாப்பதற்குத் தேவையான சட்ட ஆலோசகர்களும், புலனாய்வாளர்களும், நியமிக்கப்படவுள்ளனர்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தினால், இதற்கென, 12 பேர் கொண்ட பணியகம் ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பணியாளர் தொகுதியில், சர்வதேச குற்றவியல் நீதி – குற்றவியல் விசாரணைகள் மற்றும் அணியை ஒருங்கிணைத்து ஒரு தகவல் மற்றும் சான்றுகள் சேகரிக்கும் ஆய்வாளர்கள், இரண்டு புலனாய்வாளர்கள், மனித உரிமை அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்புக்கு உதவும் அதிகாரிகள் ஆகியோரை மேற்பார்வையிடுவதற்கான அனுபவமுள்ள சட்ட ஆலோசகர்கள் இடம்பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செயற்பாடுகளுக்கு, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்துக்கு 2.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மேலதிக செலவு ஏற்படும் என்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் திட்டமிடல் மற்றும் வரவு செலவுத் திட்டப் பிரிவு இயக்குனர் ஜோஹனேஸ் ஹுஸைமான் (Johannes Huisman) தெரிவித்துள்ளார்.
எனினும், அதனைச் செயற்படுத்த தேவையான நிதி 2021ஆம் ஆண்டுக்கான பேரவையின் வரவு செலவுத் திட்டத்தில் இல்லை எனவும், அவர் கூறியுள்ளார்.