போர்க்குற்றங்கள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் சர்வதேச கண்காணிப்பை எதிர்கொண்டுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமைக்கு சர்வதேச ஊடகங்கள் முக்கியத்துவம் அளித்து செய்திகளை வெளியிட்டுள்ளன.
மீறல்கள் குறித்த ஆதாரங்களை சேகரித்து, பாதுகாக்கும் அமைப்பு உருவாக்கப்படுவது. சிறிலங்கா மீதான சர்வதேச கண்காணிப்பை அதிகரிக்கச் செய்யும் என்றும் சர்வதேச ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள ஐ.நாவின் முன்னாள் நிபுணரும், சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான யஸ்மின் சூகா, இது பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் முக்கியமானது என்றும், உள்நாட்டு மட்டத்திலான, செயல்முறைகள் தோல்வியடைந்துள்ளன என்பதற்கான ஒரு அங்கீகாரம் என்றும், குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, ஜெனிவா வாக்கெடுப்பில் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்துக்கு பாரிய இராஜதந்திர பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த தீர்மானத்தை தடுப்பதற்கு உச்சபட்ச இராஜதந்திர முயற்சிகளை மேற்கொண்டிருந்த போதும், சிறிலங்கா அரசாங்கம் அதனை தடுப்பதில் தோல்வியடைந்துள்ளதாகவும், அந்த ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.