சூயஸ் கால்வாயில் 400 மீற்றர் நீளம் கொண்ட இராட்சத கொள்கலன் கப்பல் ஒன்று சிக்கியுள்ளதால், அந்த வழியான கப்பல் போக்குவரத்து முற்றாகத் தடைபட்டுள்ளது.
கால்வாயின் இரண்டு பக்க கரைகளின் சுவர்களிலும் மோதியபடி, பக்கவாட்டில் சிக்கிக் கொண்டுள்ள இந்த கப்பலால், அந்த பாதை ஒட்டுமொத்தமாக மூடப்பட்டுள்ளது.
சீனாவிலிருந்து கொள்கலன்களுடன் சென்ற இந்தக் கப்பல், செவ்வாய்க்கிழமை காலை சூயஸ் கால்வாய் வழியாக நெதர்லாந்தின் ரோட்டர்டாம் (Rotterdam) துறைமுகம் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, திடீரென்று வீசிய பலத்த காற்றினால், கட்டுப்பாட்டை இழந்து, முன்பக்கம் கால்வாயின் வடக்கு பக்க சுவரின் மீதும், பின்பக்கம் மேற்கு திசையில் இழுத்து தள்ளப்பட்டு மற்றொரு பக்க சுவரின் மீதும் மோதியுள்ளது.
இந்தக் கப்பலை மீட்டு, நிலைமையை சீர்படுத்த தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும், கப்பல் மோதியிருக்கும் கால்வாயின் இரண்டு பகுதிகளிலும் தோண்டி மணலை அப்புறப்படுத்தி அதனை மீட்டெடுக்க திட்டமிட்டிருப்பதாகவும் சூயஸ் நிர்வாகம் கூறி உள்ளது.