சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை, வரவேற்று கனடிய வெளிவிவகார அமைச்சர் மார்க் கார்னியா (Marc Garneau) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “இந்த தீர்மானம் சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளுக்கான மரியாதை ஆகியவற்றை உறுதி செய்வதற்கான சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான ஆதரவைக் குறிக்கிறது.
அனுசரணைக் குழுவின் ஒரு பங்களராக, இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக கனடா பேரவை உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்றியது.
கடந்த கால மீறல்களுக்கு பதிலளிப்பதிலும், எதிர்காலத்தில் கடுமையான மீறல்களைத் தடுப்பதிலும், ஐ.நா மனித உரிமைகள் பேரவை முக்கிய பங்கு வகிக்கிறது.
புதிய தீர்மானம், மனித உரிமைச் சட்டங்கள் மற்றும் மானிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்த தகவல்கள் மற்றும் சாட்சியங்களை சேகரித்து, ஒருங்கிணைத்து, பகுப்பாய்வு செய்து பாதுகாக்குமாறு, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்துக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளதன் மூலம், இந்த தீர்மானம் சிறிலங்காவில் பொறுப்புக்கூறலை முன்னேற்றுகிறது.
எதிர்கால பொறுப்புக்கூறல் செயல்முறைகளுக்கு இந்த ஆணை முக்கியமானதாக இருக்கும்.
தொடர்ச்சியான அறிக்கையிடல் மற்றும் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் கவனம், சிறிலங்காவில் நடந்து வரும் மனித உரிமைகள் கவலைகளை கண்காணிக்க உதவும்.
தனது மனித உரிமைக் கடப்பாடுகளை நிலைநிறுத்துமாறும், தண்டனையில் இருந்து தப்பிப்பதை முடிவுக்குக் கொண்டு வருமாறும், மனித உரிமை மீறல்கள் மற்றும் மீறல்கள் அனைத்திற்கும் விரிவான பொறுப்புக்கூறல் செயல்முறையை மேற்கொள்ளுமாறும் சிறிலங்காவிடம் கனடா தொடர்ந்து வலியுறுத்துகிறது.
இந்தத் தீர்மானம் சிறிலங்காவுக்கு பாதுகாப்பான, அமைதியான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு படியாகும் என்று கனடா நம்புகிறது.
இந்த நோக்கத்திற்காக, இந்த இலக்கை நோக்கிச் செல்லும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்றும் கனடிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.