தமிழ் கட்சிகள் கூட்டுப் பொறுப்போடும் ஐக்கியத்தோடும் தமிழ் மக்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு இணைந்து பணியாற்ற வேண்டும் என தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் சிவகரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சர்வதேச அரங்கில் இராஜதந்திர ரீதியாக இலங்கைக்கு ஒரு தோல்வியை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணை ஏற்படுத்தியிருக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பாதிக்கப்பட்ட தமிழர் தரப்பிற்கு ஒரு நியாயம் கிடைக்கக்கூடிய வகையில் பிரேரணை இல்லையென சிவகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
மன்னாரில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும், பூகோள அரசியலின் பிரகாரம் இருதுருவ அரசியல் போக்கின் அடிப்படையில் அமெரிக்கா சார்பு, சீன சார்பு என்கின்ற இரண்டு சார்பு நிலைகளுக்குள் இலங்கை தொடர்பாக பிரேரணை நிறை வேற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறைந்தபட்சம் 30/1 தீர்மானத்தினுடைய அளவில்கூட 46/1 தீர்மானத்தின் உள்ளடக்கம் காணப்படவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ள சிவகரன், குறிப்பாக சாட்சியங்களைப் பதிவு செய்தலும் பாதுகாத்தலும் என்கின்ற பொறிமுறையைத் தவிர ஏனைய பொறிமுறைகள் புதிய தீர்மானத்தில் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.