சிறிலங்காவில் நடைபெற்ற மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் கனடா மிகவும் பலமான அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜெனிஃபர் ஓ கொனெல் (Jennifer O’Connell) தெரிவித்தார்.
பிக்கறிங்-அக்ஸ்பிறிஜ் (Pickering-Uxbridge) தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெனிஃபர் ஓ கொனெல் (Jennifer O’Connell) நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார்.
கனடாவிலும், உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் சிறிலங்காவில் முன்னர் இடம்பெற்ற பாரிய மீறல்களுக்கும், தொடரும் மனித உரிமை மீறல்களுக்கும் நீதியையும், பொறுப்புக் கூறலையும் கோரிப் போராடி வருகிறார்கள்.
நான், எனது சமூகத்தில் உள்ள முஸ்லிம்களையும் அண்மையில் சந்தித்தேன். முஸ்லிம்களினதும், ஏனைய மதச் சிறுபான்மையினரதும் அடிப்படை அடக்கம் செய்யும் உரிமையை மறுக்கும் வகையில், உடல்களைப் பலவந்தமாகத் தகனம் செய்யும் சிறிலங்கா அரசின் அண்மைய கொள்கையால் அவர்கள் அச்சமடைந்துள்ளதுடன், ஆழ்ந்த கவலையும் கொண்டிருக்கிறார்கள்.
சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு அதிகரித்த சர்வதேச பொறுப்புக்கூறலுக்கும், கண்காணிப்புக்கும் அழைப்புவிடுக்கும், மனித உரிமைப் பேரவையின் 46-1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.
கனடா இத்தகைய மனித உரிமை மீறல்களுக்கு எதிராகப் பலமான நிலைப்பாட்டைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதுடன், சமாதானம், மேம்பாடு, மீளிணக்கம் ஆகியவற்றுக்கான நடவடிக்கைகளை எந்தவேளையிலும் ஆதரிக்கவேண்டும் என்று மேலும் தெரிவித்தார்.