உய்குர் இன முஸ்லிம்கள் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக, சீனா ஒன்பது பிரித்தானிய குடிமக்கள் மற்றும் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
ஜின்ஜியாங் மாகாணத்தில் சிறுபான்மை உய்குர் இனத்தவருக்கு எதிரான மனித உரிமை மீறலில் ஈடுபடுவதாகக் கூறி, தங்கள் மீது பிரித்தானியா பொருளாதாரத் தடைகளை விதித்ததற்குப் பதிலடியாக இந்த நடவடிக்கையை சீனா எடுத்துள்ளது.
இதில், கன்சர்வேடிவ் கட்சியின் முன்னாள் தலைவர் இயெய்ன் டங்கன் ஸ்மித் (Iain Duncan Smith), பாகிஸ்தானைப் பூர்விகமாகக் கொண்ட நுஸ்ரத் கனி (Nusrat kaṉi) ஆகியோர் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் அடங்குவர்.
இதுதவிர, சீன ஆய்வு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு உள்ளிட்ட 4 அமைப்புகள் மீதும் சீனா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.
வடமேற்கு பிராந்தியத்தில் உள்ள முகாம்களில் சீனா உய்குர் இன மக்களை தடுத்து வைத்து சித்திரவதை, கட்டாய உழைப்பு மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் போன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதாக பல உலக நாடுகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
எனினும், இது தொடர்பான குற்றச்சாட்டுகளை சீனா மறுத்துள்ளது.