மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளருக்கு எதிராக தடை எழுத்தாணைக் கோரி மாநகர முதல்வரினால் மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகர சபை தீர்மானத்தின் மூலம் முதல்வரினால் ஆணையாளருக்கு 10 அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் பெப்ரவரி 11 ஆம் திகதி இன்னொரு சபை தீர்மானத்தின் மூலம் கையளிக்கப்பட்ட அதிகாரங்கள் மீளப்பெறப்பட்டன.
குறித்த அதிகாரங்கள் மீள பெற்றுள்ள நிலையில் தொடர்ந்தும் தான் அந்த அதிகாரங்களையே பயன்படுத்துவேன் என தெரிவித்துள்ள மாநகர ஆணையாளர் அதன்படியே தொடர்ந்தும் செயற்பட்டார்.
எனவே அவர் குறித்த அதிகாரங்களை பயன்படுத்துவதை சட்டரீதியாக நிறுத்துவதற்காக மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் மாநகர முதல்வரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், மனுதாரர் கேட்டுள்ள நிவாரணங்கள் ஏன் வழங்க முடியாது என்று நீதிமன்றம், மட்டக்களப்பு ஆணையாளரிமும், இரண்டாவது பிரதிவாதியான கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரிடம் கேட்டுள்ளது.
அத்துடன் இந்த வழக்கு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமென அறிவித்துள்ள நீதிமன்றம், அன்றைய தினத்தில் பிரதிவாதிகள் ஏன் அந்த நிவாரணங்களை வழங்க முடியாது என்பதற்கான காரணத்தையும் அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.