கனடா, பிரித்தானியா, அவுஸ்ரேலியா போன்ற புலம்பெயர் நாடுகளில் செயற்படும் ஏழு தமிழ் அமைப்புகளுக்கு, சிறிலங்கா அரசாங்கம் மீண்டும் தடை விதித்துள்ளது.
இது குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தல் சிறிலங்கா பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவினால். வெளியிடப்பட்டுள்ளது.
பிரித்தானிய தமிழர் பேரவை, கனேடிய தமிழ் காங்கிரஸ், அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், உலக தமிழர் பேரவை, கனேடிய தமிழர் தேசிய அவை, தமிழ் இளையோர் அமைப்பு, உலக தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஆகிய அமைப்புகளுக்கே தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சிறிலங்காவுக்குள் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள தனிநபர்களின் பெயர்களும் இந்த வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலராக இருந்த காலத்தில், புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்கு சிறிலங்கா அரசாங்கத்தினால் தடை விதிக்கப்பட்டிருந்தது.
எனினும், 2016 இல், சிறிலங்காவின் முன்னைய அரசாங்கம் பெரும்பாலான தமிழ் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் மீதான தடையை விலக்கிக் கொண்டிருந்தது.
இந்த நிலையிலேயே, சிறிலங்கா அரசாங்கம் மீண்டும் குறித்த அமைப்புகள், மற்றும் தனிநபர்களுக்கு தடைவிதிக்கும் வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.