தமிழ் இனத்தின் விடுதலைக்காக, இந்தியா சிறந்த முறையில் தனது பங்களிப்பை வழங்கும் என்று எதிர்பார்ப்பதாக, சிறிலங்காத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட செயற்குழு உறுப்பினர்களுடன் நடத்திய கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“ஐ.நா மனித உரிமை பேரவை தீர்மானத்தில் இந்தியா நடுநிலைமை வகித்தாலும் ஆக்கபூர்வமான பணிகளை முன்னெடுத்திருக்கிறது.
இந்தியா விவேகமாகவும் தந்திரமாகவும் நடுநிலை வகித்துள்ளது.
மாகாணசபை தேர்தல் நடத்தப்படவேண்டும் என பல நாடுகள் அழுத்தங்களை வழங்கியுள்ளன.
அவ்வாறு தேர்தல் நடாத்தாவிட்டால் பல நாடுகள் எதிராக செயற்படும் நிலையேற்படும்.
மாகாண சபை தேர்தல் நடாத்தப்பட்டால் அதனை வெற்றி கொள்வதற்காக புதிய அணுகுமுறைகளை மேற்கொள்ளும்.
வடக்கு கிழக்கு மாகாண சபைகளை கைப்பற்றுவோம் என்று கூறி, சிறிலங்கா அரசாங்கம் வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வரும் நிலையில் அனைவரும் ஒன்றுபட்டு செயற்படவேண்டும்.
தமிழ் தேசிய கட்சிகளை இணைத்து எவ்வாறு செயற்படமுடியும் என்பதை ஆராய்ந்து செயற்படுவோம்.” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.