தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், பாதுகாப்பை அதிகரிக்குமாறு, சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, காவல்துறைமா அதிபர் சந்தன விக்ரமரத்னவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஹொரகொல்லவில் உள்ள தமது வீட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், அங்கு சோதனை நடத்தியுள்ளமை குறித்தும் அவர் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த குழுவினர் அங்கிருந்து எதையும் எடுத்துச் செல்லாத நிலையில், அதனை ஒரு கொள்ளை முயற்சி என்று எடுத்துக் கொள்ள முடியாது என்றும் சந்திரிகா குமாரதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக முறையிடப்பட்டதை அடுத்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்த போதும், அந்த விசாரணைகளின் மூலம், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் நிகழ்த்த திட்டமிடப்பட்டுள்ள ஒரு செயற்பாட்டுக்கான ஒத்திகையாக இது இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிட்டுள்ள சந்திரிகா குமாரதுங்க, தமக்கு பாதுகாப்பை அதிகரிக்குமாறும் கோரியுள்ளார்.