புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட ஒரு தொகுதி தமிழர்கள் ஜேர்மனியில் இருந்து சிறிலங்காவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
டுசெல்டோப்வ் (Düsseldorf) சர்வதேச விமான நிலையத்தினூடாக சிறிலங்காவுக்கு நாடு கடத்தப்பட்ட இவர்கள், இன்று காலை 10.37 மணியளவில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்துள்ளனர்.
சிறப்பு விமானம் மூலம், ஜேர்மனியில் இருந்து 31 பேர் நாடு கடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகிய போதும், ஜேர்மனியில் இருந்து 20 பேரும், சுவிட்சர்லாந்திலிருந்து நான்கு பேருமாக 24 பேரே, கட்டுநாயக்கவை வந்தடைந்துள்ள சிறிலங்கா அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
நாடு கடத்தப்பட்ட தமிழர்கள், அனைவரும், குடிவரவு மற்றும் குடிவரவுத் துறையினரால் சிறிலங்கா இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தல் செயல்முறை முடிந்த பின்னர், இவர்கள், குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் தேசிய புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
அதேவேளை, புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, வலுக்கட்டாயமாக நாடுகடத்தப்படுவதற்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த நால்வர் இறுதி நேரத்தில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் செய்திகள் கூறுகின்றன.