மஹரகம பிரதேசத்தில், நேற்று முன்தினம் (29) பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், தமிழரான சாரதியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு, கதையில் அல்லாமல் செயலில் காட்டியுள்ளதெனத் தெரிவித்த அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான உதய கம்மன்பில, குறித்த கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதுடன், அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை முன்னெடுக்க பொலிஸ்மா அதிபர் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளார் என்றும் தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பில் இது பற்றிக் கருத்துரைத்த அவர், சட்டத்தைப் பாதுகாக்க வேண்டியவர்கள் இவ்வாறு செயற்படுவதை அரசாங்கம் எதிர்ப்பதாகவும் இது குறித்து உடனடி நடவடிக்கை எடுத்தமை மூலம், இந்த விடயத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு தெளிவாக விளங்குவதாகவும் தெரிவித்தார்.
இதுபோன்ற சம்பவங்கள் உலகெங்கும் இடம்பெறும் நிலையில், இதற்கு அரசாங்கம் பொறுப்பு இல்லையென்றாலும் இது போன்ற சம்பவங்கள் குறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் தான், அரசாங்கம் குற்றவாளியாகும். எனவே, அரசாங்கம் இது போன்ற சம்பவங்களை வன்மையாகக் கண்டிப்பதால், இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் குறிப்பிட்டார்.
இவ்வாறான சம்பவங்களே, ஜெனீவாவில் எம்மை குற்றவாளியாக்குவதாக ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தபோது பதிலுரைத்த அமைச்சர், ‘ஜெனீவாவில் இவ்வாறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவில்லை’ என்றார்.