சீனாவில் கிடைத்துள்ள சினோபார்ம் தடுப்பூசிகளை செலுத்தும் பணி வரும் 5ஆம் நாள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சிறிலங்காவுக்கு சீனா கொடையாக வழங்கிய ஆறு இலட்சம் சினோபார்ம் கொரோனா தடுப்பூசிகளை ஏற்றிக் கொண்டு சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானம் நேற்று முற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்த தடுப்பு மருந்துகளை சீன தூதுவர் கியூ சென்ஹோங் கிடம் இருந்து அதிகாரபூர்வமாக பொறுப்பேற்றார்.
இந்த நிகழ்வில் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
சீனாவினால் வழங்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு மருந்து இன்னமும் உலக சுகாதார நிறுவனத்தினாலோ, சிறிலங்காவின் தேசிய மருந்துகள் ஒழுங்கமைப்பு அதிகார சபையினாலோ அங்கீகரிக்கப்படவில்லை.
இந்த நிலையில், எதிர்வரும் திங்கட்கிழமை இந்த தடுப்பூசிகளை சிறிலங்காவில் உள்ள சீனர்களுக்கு ஏற்றுகின்ற நடவடிக்கை தொடங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
நிபுணர்குழுவின் விரிவான ஆய்வுகளுக்குப் பின்னரே உள்நாட்டவர்களுக்கு இந்த தடுப்பு மருந்து செலுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.